பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்தால் பொதுமக்கள் அவதி

285

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், கண் எரிச்சல், மூச்சடைப்பால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சடைப்பு காரணமாக அவதிப்பட்டனர். குப்பை கிடங்கின் அருகிலேயே பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளதால், துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் கொசு தொல்லை அதிகம் உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். அத்துடன் குப்பைகள் அங்குள்ள ஏரி நீரில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து வருவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.