தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை !

227

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கை ஒன்றில், தமிழகம் முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிக்கையை எதிர்த்து 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தீர்ப்பு இருக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.
பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீட்டு வழக்கில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்பதற்கு பதிலாக தமிழில் மட்டுமே தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கை பின்னர் விரிவாக விசாரிப்பதாக தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.