ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 556 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் !

265

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 556 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரங்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அறிக்கைகளை சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஆயிரத்து 949 பேர் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதில் சென்னையிலிருந்து 886 பிரமாணப் பத்திரங்களும், மதுரையிலிருந்து 996 பிரமாணப் பத்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் 556 பிரமாண பத்திரங்கள் போலீசாருக்கு எதிராக இருப்பதாக கூறிய அவர், 120 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் நாளொன்றுக்கு 5 பேரை மட்டுமே விசாரணை செய்ய முடியும் என்று ராஜேஸ்வரன் தெரிவித்தார். இதனால் இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 5 மாதங்கள் ஆகும் என தெரிவித்த அவர், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.