சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை

272

சுதந்திர தினத்தன்று டெல்லியில் சாமியார் வேடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றுவார். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் கோலாகல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கோட்டை வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் சாமியார் வேடத்தில் டெல்லிக்குள் ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையம், நாடாளுமன்ற வளாகம், செங்கோட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.