தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

85

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தியாகராஜ சுவாமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, தியாகராஜ சுவாமி, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு விடிய விடிய திருவாதிரை மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கும், கைலாசநாதருக்கும் அர்ச்சகர்கள் திருமண மாலை மாற்றி தாலி கட்டி தீபாராதனை காண்பித்தனர். இதில், பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.