இடைக்கால முதல்வராக சந்திரசேகரராவ் நீடிப்பார் – ஆளுனர் இஎஸ்எல் நரசிம்மன்

394

தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது.

119 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில், 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்தித்தால், பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்ற நம்பத்தகுந்த தகவலை அடுத்து, சட்டசபையை கலைக்க திட்டமிட்ட முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று தனது அமைச்சரவையை கூட்டினார்.

ஐதராபாத்தில் இன்று முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், தெலுங்கானா சட்டசபையை கலைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது அமைச்சரவையை கலைக்குமாறு, ஆளுனருக்கு முதலமைச்சர் சந்திரசேகரராவ் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக, ஆளுனரை சந்தித்த அவர், சட்டசபையை கலைக்க வேண்டும் என்ற அமைச்சரவையின் ஒப்புதல் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, தெலுங்கானா சட்டசபையை கலைத்து உத்தரவிட்டுள்ள ஆளுனர் இஎஸ்எல் நரசிம்மன், இடைக்கால முதலமைச்சராக சந்திரசேகரராவ் நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.