தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க விசாரணை அதிகாரிகள் முன் அனுமதி பெற வேண்டும்! மத்திய அரசு அறிவிப்பு!!

334

புதுடெல்லி, ஆக. 4–
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க விசாரணை அதிகாரிகள் முன் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரஜிஜு கூறியதாவது:–
புதிய வழிமுறை
குடிமக்களின் தனிமையும், அவர்களது தொலைபேசி எண்களின் நம்பகத்தன்மையும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். விதிகளை மீறி தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
சில நாட்களுக்கு முன்புதான் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கான வழிமுறைகளை சீராய்வு செய்தோம். அதன்படி ஆரம்பகட்ட வழிமுறைகள் பொதுவாக வகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு எம்.பி. அல்லது பொதுமக்களில் ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்க வேண்டுமெனில் அந்தந்த மாநில காவல்துறை தலைவரிடம் இருந்து விசாரணை அதிகாரிகள் முன் அனுமதி பெற வேண்டும். நகரமாக இருந்தால் போலீஸ் ஆணையர்களிடமும், மாவட்ட அளவில் கூடுதல் ஆணையரிடமும் முன் அனுமதி பெற வேண்டும். நேர்மையை கடைபிடிக்க வேண்டிய சில போலீஸ் அதிகாரிகளே இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.