ஊசிகள் மூலம் பரவுகிறது: ‘டாட்டூ’ வரைந்தால் எய்ட்ஸ் அபாயம்! உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிப்பு!!

407

லண்டன், ஜூலை.29–
‘டாட்டூ’ மோகத்தால் உலகம் முழுவதும் ஏராளமானோர் எய்ட்ஸ் உள்ளிட்ட உயிர்க்கொல்லும் நோய்க்கு பலியாகி வருகின்றனர்.
தற்போது மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால் அவர்கள் ஊசி போடும் போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் டிஸ்போசபிள் சிரிஞ்ச் –ஐ தான் பயன்படுத்துகிறார்கள்.
ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தினால் அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்கு காரணமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் உள்ளிட்ட பயங்கர நோய்களால் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் உயிர் பயம் ஏற்பட்டது. இதனால் தற்போது மிகவும் விழிப்புணர்வாக இருந்து வருகிறார்கள்.
சாதாரண சலூன்களில் கூட முகச்சவரம் செய்ய ஒருவருக்கு பயன்படுத்தும் பிளேடுகளை மற்றவருக்கு பயன்படுத்துவதில்லை.
இவ்வாறு விழிப்புணர்வு இருந்து வரும்போதிலும், பச்சைக் குத்தி கொள்ளும் ‘டாட்டூ’ விஷயத்தில் உலகம் முழுவதும் மக்கள் எளிதாக ஏமாந்து வருகின்றனர். தற்போது ‘டாட்டூ’ வரைந்து கொள்ளுவது புதிய நாகரிகமாக இருந்து வருகிறது.
பல விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் முழுவதும் விதவிதமான ‘டாட்டூ’களை வரைந்து கொண்டு வலம் வருகிறார்கள். சினிமா நடிகர்களும் இந்த பட்டியலில் அடங்குவர். அவர்களைப் பார்த்துவிட்டு இளைஞர்களும் தங்கள் உடல்களில் ‘டாட்டூ’ வரைந்து வருகின்றனர்.
இவ்வாறு ‘டாட்டூ’ வரைய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் டிஸ்போசபிள் ஊசிகளை பயன்படுத்துவதில்லை. ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இதன்காரணமாக எய்ட்ஸ் உள்ளிட்ட உயிர்க்கொல்லும் நோய்கள் எளிதாக பரவுகின்றன. அத்துடன் ‘டாட்டூ’வில் பயன்படுத்தும் மை–யில் உள்ள ஆபத்தான நச்சுப் பொருட்கள் தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களும் உருவாகின்றன. இதுதவிர ஹெபடைடிஸ் டி மற்றும் சி உள்ளிட்ட கொடுமையான நோய்கள் கூட ‘டாட்டூ’ ஊசிகள் மூலம் பரவி வருவதாக ஐரோப்பிய ரசாயன அமைப்பு எச்சரித்துள்ளது.