தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமிருந்த மாநில கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையர் பதவிப் பறிக்கப்பட்டுள்ளது

305

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமிருந்த மாநில கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையர் பதவிப் பறிக்கப்பட்டுள்ளது
ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். தொழிலதிபர் சேகர் ரெட்டியுடனான ராம மோகவ ராவின் தொடர்புக் குறித்தத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராம மோகன ராவ் அதிருப்தியுடன், கடும் கண்டனங்களையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது பதவிப் பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவரிடமிருந்த பதவி கிரிஜா வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. தற்போது சேகர் ரெட்டியின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சேகர் ரெட்டியின் டைரியில், லஞ்சம் வாங்கிய தமிழக அரசின் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பட்டியல் இருந்ததாகவும், அந்தப் பட்டியலை வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்படாத நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியான கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையரின் பதவி கிரிஜா வைத்தியநாதனிடமிருந்துப் பறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு, தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர்தான் முக்கியத்துவம் வாய்ந்த கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையர் பணியையும் கவனித்து வருவது வழக்கமாக உள்ளது. தற்போது, இந்தப் பதவி தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு ஒருவார காலத்திற்கு முன்பே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
நிரஞ்சன் மார்டி கடந்த 5-ம் தேதி வெள்ளிக்கிழமை கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு ஆணையராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். கிரிஜா வைத்தியநாதனிடமிருந்த அந்தப் பதவிப் பறிக்கப்பட்டு நிரஞ்சன் மார்டியிடம் வழங்கப்பட்டுள்ளதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அதிக அளவில் பணம் கொடுத்தது குறித்த சேகர் ரெட்டி டைரியின் தகவல்கள்தான் இந்த மாற்றத்துக்குக் காரணமாகவும் கூறப்படுகிறது.