சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி சேவை மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு யோகா குறித்து சிறப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

இதேபோன்று, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு யோகா புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விவேகானந்தா யோகா சமூக அமைப்பு இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத்திலுள்ள தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பு யோகா கருத்தரங்கு நடத்தப்பட்டது. தமிழ்நாடு கலாச்சார கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். மன அழுத்தம், கோபம், பயம் போன்றவற்றிலிருந்து விடுபடுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.