தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ..!

401

ஆறாவது நாளாக தொடரும் தென் மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தால், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்த வலியுறுத்தியும், கடந்த 12ஆம் தேதி முதல், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 4,200 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. மும்பையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மாநில அளவிலான டெண்டர் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், தாங்கள் தலையிட முடியாது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இந்தநிலையில், போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. இதனையடுத்து, தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.