நெடுஞ்சாலை ஒப்பந்த டெண்டர் ஊழல் வழக்கு : உறவினர்களுக்கு டெண்டரை ஒதுக்கியதாக முதல்வர் மீது புகார்

302

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் நடந்துள்ள 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, திமுக சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பணிகளை ஒதுக்கியதன் மூலம் முதலமைச்சர் பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும், முதல்வர் பதவியையும் தவறாக பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதி வரை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.