தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

89

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை கூட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவ, மாதர் அமைப்புகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பாலக்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையை கண்டித்தும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதே போல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பதவி விலக வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். இதே போன்று, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.