போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் | தமிழக அரசு வேண்டுகோள்

61

புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் போகி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத் தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.