இந்தியாவிலேயே இணையதள பயன்பாட்டில் தமிழகம் முதலிடம்!

212

நகர்ப்புறங்களில் இணைய தளங்களை பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில், நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. டெல்லி, மராட்டியம் ஆகியவை 2-ஆவது இடத்தில் உள்ளன.
இதுதொடர்பாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:
நாடு முழுவதும் 34.2 கோடி பேர் (342 மில்லியன்) இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில், நகர்ப்புறங்களில் 23.1 கோடி பேரும் (231 மில்லியன்), கிராமப்புறங்களில் 11.2 கோடி பேரும் (112 மில்லியன்) உள்ளனர்.
இணையதளம்
நகர்ப்புறங்களில் இணையதளங்களை பயன்படுத்துவோரில், தமிழகத்தில் மட்டும் 2.1 கோடி பேர் (21 மில்லியன் பேர்) உள்ளனர். அதாவது, நாட்டில் மொத்தமுள்ள நகர்ப்புற இணையதள பயன்பாட்டாளர்கள் சதவீதத்தில் தமிழகத்தில் மட்டும் 9 சதவீதம் பேர் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து டெல்லி, மராட்டியத்தில் முறையே 1.96 கோடி பேரும் (19.6 மில்லியன்), 1.97 கோடி பேரும் (19.7 மில்லியன்) இணைய தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
புள்ளி விவரம்
நாட்டிலேயே அதிகமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில்தான் கிராமப்புறங்களில் அதிக அளவு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மட்டும் கிராமப்புறங்களில் 1.12 கோடி பேர் (11.2 மில்லியன்) இணையதளத்தை உபயோகிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, மராட்டியத்தில் கிராமப்புறங்களில் சுமார் 97 லட்சம் பேரும், ஆந்திரத்தில் சுமார் 90 லட்சம் பேரும் இணையதளத்தை உபயோகிக்கின்றனர் என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் இணையதள சேவையை அதிகரிக்கும் நோக்கில், 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை ஆப்டிகல் பைபர் வயர் மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாரத் நெட் என்ற பெயரில் புதிய திட்டத்தை வகுத்துள்ள மத்திய அரசு, அந்த திட்டத்தை 3 கட்டங்களாக செயல்படுத்தவும் உள்ளது.
தமிழகம் முதலிடம்
இதில் முதல்கட்டமாக, 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை வரும் 2017- ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், 2-ஆவது கட்டமாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை 2018 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள்ளும், 3–வது கட்டமாக மாவட்டங்கள், வாரியங்கள் ஆகியவைகளை 2023- ஆம் ஆண்டுக்குள்ளும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.