தமிழக வரலாற்றை மாற்றப் போவது பா.ஜ.க. மட்டுமே – தமிழிசை சவுந்தரராஜன்

335

தமிழகத்தில் தாமரை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றை மாற்றப்போவது பா.ஜ.க. தான் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பா.ஜ.க. தமிழக மகளிர் அணியின் தமிழ் மகள் தாமரை மாநாடு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், பெண்கள் உயர்கல்விக்கான பாதி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும், சிறுமிகள் பாலியல் வன்கொடுமையை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தாமரை வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டதாக குற்றச்சாட்டினார். தமிழக வரலாற்றை மாற்றப் போவது பா.ஜ.க. தான் என்றும், பா.ஜ.க. ஆட்சியில் தமிழர்களின் உயிர் காக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.