தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சோதனை கணக்கில் வராத ரூ. 14.79 லட்சம் பறிமுதல்!

695

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக;ம் முழுவதும் வட்டார போக்குவரத்து மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடமைகளை செய்வதற்கு அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை, திருச்சி, சிவகாசி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஓழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் காவல்துறையினரை கண்டதும் லஞ்ச பணத்தை வெளியே தூக்கி எறிந்தனர். தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத 14 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த சோதனையில் மதுரை மற்றும் விருதுநகரில் லஞ்சம் வாங்கிய இரண்டு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.