தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

388

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டு உள்ளது. இதனால், தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில், புதுவையில் ஓரிரு இடங்களிலும் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.