தமிழகம் நோக்கி நகரும் கஜா புயல் : இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை

106

கஜா புயல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால், தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இரண்டாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் புயல் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கஜா புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுகுறித்து மீனவர் தமிழ்செல்வன் பேசுகையில், புயல் சின்னத்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டார். காரைக்கால் தனியார் துறைமுகங்களிலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால், ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.