ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் பந்த் வணிகர்கள் கடையடைப்பு, பேருந்து, ஆட்டோ, வாகனங்கள் ஓடாது

192

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் இன்று பந்த் அனுசரிக்கப்படுகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்த தடையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னரும், எந்த முடிவும் கிடைக்காதநிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொமுச, சிஐடியு உள்பட 10 தொழிற்சங்கங்கள், லாரி உரிமையாளர் சம்மேளனம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், தனியார் பள்ளி வாகன கூட்டமைப்பு நலச் சங்கம் உள்ளிட்டவை இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளதால், இன்று பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி, வேன்கள் இயங்காது.

மாநிலம் முழுவதும் இன்று லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடையும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மணல் லாரிகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, விவசாயிகள் இன்று முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதவிர, பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்களும், தொழில் நிறுவனங்களும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்று முழுமையான பந்த் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி ஏஎப்டி திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவ- மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று புதுவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராளிகள் இயக்கம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.