தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

220

தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் தமது ஆட்சி காலத்தின்போது அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் தனிநபர்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவுசெய்வது வழக்கமாகி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆட்சியிலும், முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை காரணம் காட்டி தங்கள் ஆட்சியில் போடப்படும் வழக்குகளை நியாயப்படுத்துவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு ஜனநாயகத்தை ஒடுக்குவதற்கும், அரசியல் எதிரிகளை தண்டிப்பதற்கும் அவதூறு வழக்குகளை போடுவது தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அவதூறு வழக்குகளை பயன்படுத்தி அரசியல் கட்சியினரை பழிவாங்க கூடாது என்பதை வலியுறுத்தியும், இதற்கு அரசு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் தமிழக அரசு அவற்றையெல்லாம் புறக்கணித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அனைத்து அவதூறு வழக்குகளையும் கைவிட வேண்டுமெனவும், விமர்சனங்களை ஜனநாயகப் பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.