உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முழுநேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு! ஆக.12 விண்ணப்பிக்க கடைசி தேதி!!

165

சென்னை, ஆக.6–
தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் முழு நேர ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) படிப்புக்கு ஆகஸ்டு 12-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த நிறுவனத்தில் தமிழ் இலக்கியம், சுவடிகள் புலம், தமிழ் மொழி- மொழியியல் துறை, அயல்நாட்டு தமிழர் புலம், சமூகவியல் பண்பாட்டு கல்வியியல் புலம் ஆகிய 4 பிரிவுகளில் 2016–-17-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கு நுழைவு, விண்ணப்பக் கட்டணம் ரூ.300-ம், சாதிச் சான்றிதழ் வழங்கும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.200-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆய்வியல் நிறைஞர் வகுப்பு கல்விக் கட்டணம் ரூ. 4,500 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஆகஸ்டு 12–-க்குள் வந்து சேர வேண்டும்.
இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்டு 18–ல் நடைபெறும். 24-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் தகவல்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.