தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் 2 பேர் உயிரிழப்பு, இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

1262

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளநிலையில், இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

தைவான் தீவில் கிழக்கு கடற்கரையோரத்தில், சுமார் இருபது கிலோ மீட்டர் ஆழத்தில் 6 புள்ளி 4 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தைவான் தலைநகர் டைபெய் நகரிலும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹுவேலியன் நகரில் ஹோட்டல்கள், குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழுந்ததோடு, சாலைகளும் சேதமடைந்துள்ளன. திடீர் நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அலறியடித்தபடி, தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஹுவேலியன் நகர தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. ஹுவேலியன் நகரில் மார்ஷல் ஹோட்டல் கட்டிடம் சரிந்துள்ளதை அடுத்து, அதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில், ராணுவம் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.