இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வென்றது இந்தியா!

860

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக சாதனையை சமன் செய்துள்ளது.
இந்திய-இலங்கை அணிகள் மோதிய 2வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரெரா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 2007 ஆம் ஆண்டு, டி20 தொடரில் 260 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணியின் உலக சாதனையை, இந்தியா தற்போது சமன் செய்தது.
இதனையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் குசல் பெரெரா மட்டுமே அரை சதம் கடந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் சஹால் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா-இலங்கை அணிகள் போதும் கடைசி டி20 போட்டி மும்பையில் நாளை நடைபெற உள்ளது.