ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாட்டுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

79

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணம், ஊழல் ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டினார். ரூபாய் நோட்டு பிரச்சனைகள் 50 நாள்களுக்குள் தீரும் என மத்திய அரசு தெரிவித்ததை குறிப்பிட்ட அவர், இதுவரை எவ்வளவு கருப்பு பணம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார். பெரும் செல்வந்தர்கள் யாரும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், ஏழை, எளிய மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். சொந்த பணத்தை பெறுவதற்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவல நிலை நீடிப்பதாக கூறிய அவர், வங்கிகளில் குறிப்பிட்ட அளவு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என குற்றஞ்சாட்டினார்.