ஏழை மாணவர்கள் உயர பறப்பதற்கான கல்வி என்ற சிறகு முறிந்துவிடாமல், அனைவரும் துணை நிற்போம்…

131

கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று விமர்சனம் எழுந்த நிலையில், ஒரு குடிமகனாக தன்னுடைய கேள்விகளை முன் வைப்பதாக நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தவன் நான் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையில், எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை பரிந்துரை செய்திருப்பது அச்சமூட்டுவதாகவும், இந்த நுழைவுத் தேர்வுகள், உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்துவிடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு கல்வி ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது எனவும் நடிகர் சூர்யா கூறியுள்ளார். தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், ஒரு குறிப்பிட்ட இணையதள முகவரியை வெளியிட்டு, அதில், இந்த மாத இறுதிக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள நடிகர் சூர்யா, ஏழை மாணவர்கள் உயர பறப்பதற்கான கல்வி என்ற சிறகு முறிந்துவிடாமல், அனைவரும் துணைநிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.