திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

225

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய நாளில் இருந்தே திரளான பக்தர்கள் கோயிலில் தங்கியிருந்து கந்த சஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். இதனையொட்டி சுவாமிக்கு தினந்தோறும் அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவினை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலும் இன்று மாலை தாரகாசூரனை முருக பெருமான் சக்திவேல் கொண்டு வதம் செய்வதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சூரசம்காரத்தை வருகை தரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.