அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க முடியுமா? : தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

425

கனமழை பெய்து வருவதால் சில நாட்களுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க முடியுமா? என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடிக்குக் குறைக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், முல்லைப் பெரியாறு அணை நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள் எனவும், எந்த வித அறிவிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது எனவும் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, கேரளா, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுக்கள் தொடர்ந்து கலந்தாலோசித்து செயலாற்றி வருகிறார்கள் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் சில நாட்களுக்கு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு குறைவாக குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர், முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை குறைத்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று கேரளா கூறியதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியார் அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.