காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இன்று காலை 10.30-க்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!

374

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.காவிரி வழக்கில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடியும்வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் கர்நாடகம் செவிசாய்க்கவில்லை. இதனிடையே, வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி வழக்கில் இன்று காலை பத்தரை மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, காவிரி நீரை பெறுவதற்கு 25 ஆண்டுகளாக தமிழக அரசு நடத்திவரும் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிட்டுமா என விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆவலோடு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தமிழகம், கர்நாடகம் அகிய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.