குறைதீர்ப்பு அதிகாரியை இன்னும் நியமிக்காதது ஏன்? – உச்சநீதிமன்றம்

382

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை இன்னும் நியமிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் மூலம் பரவும் வதந்திகளால் அப்பாவிகளை கும்பலாக சேர்ந்து அடித்துக் கொலை செய்யும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக தலைதூக்கியுள்ளன. இதைத் தொடர்ந்து,வாட்ஸ்அப் வழியாக தவறான தகவல்களும், வதந்திகளும் பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறு, மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 2 நோட்டீஸ்களை அனுப்பியிருந்தது. போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வதந்திகளை பரப்புவதற்கான ஆப் எனக் கருதப்பட்டு, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மத்திய அரசு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இத்துடன், பொய்ச் செய்தி எங்கிருந்து பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப வழிமுறகளை கண்டறியுமாறும், குறைதீர்ப்பு அதிகாரியுடன் இந்திய அளவில் குழு அமைக்குமாறும் மத்திய அரசு கடந்த வாரத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்தியாவிற்கு குறை தீர்ப்பு அதிகாரியை இன்னும் நியமிக்காதது ஏன் என 4 வாரத்தில் விரிவான பதிலளிக்குமாறு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம் ஆகியவையும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.