சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..!

472

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். 33 வயதான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் இணைந்துள்ளார். திருமணமாகாத சதீஷ், தற்போது சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை 1.45 மணிக்கு சாதாரண உடையில் காவல்நிலையத்திற்கு வந்த அவர், சிறப்பு உதவி ஆய்வாளர் சிரஞ்சீவியிடம் சாவியை பெற்று துப்பாக்கியை எடுத்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தின் வாயில் அருகே சென்ற அவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த உதவி ஆய்வாளர் சதீஷின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே காவல் நிலைய மேஜையில் சதீஷ் கைப்பட எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த அருண்ராஜ், என்ற போலீஸ் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.