ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று அம்மாநில எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் ..!

418

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று அம்மாநில எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளன.
ஆந்திரவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு முழுஅடைப்பு போராட்டத்தை அறிவித்தது. இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆந்திராவின் மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் எதிர்கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
பெரும்பலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆந்திராவில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 13 மாவட்டங்களில் உள்ள சுமார் 14 ஆயிரம் பேருந்துகள் அந்தந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.