லாரிகள் வேலை நிறுத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு..!

283

8 நாட்களாக நீடித்து வந்த வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து இன்று லாரிகள் வழக்கம்போல் இயங்கின.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்து 18 சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல், 3ஆம் நபர் காப்பீட்டிற்கான பிரிமியம் கட்டணத்தை குறைத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் குடோன்களில் தேக்கமடைந்ததுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து லாரி உரிமையாளர்களின் போராட்ட வாபஸ் பெற வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து 8 நாட்களாக நீடித்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் லாரிகள் வழக்கம்போல் இயங்கின.