ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்யலாம் : தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

104

ஸ்டெர்லைட் ஆலையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து, அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கடந்த மே மாதம் தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஆலையில் ஆய்வு செய்து, 6 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தமிழக அரசின் வாதத்தை கேட்காதது ஏன்? என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின், தமிழக அரசின் வாதத்தை கேட்டு, முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, குழு ஆய்வு செய்வது தொடர்பான, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..