தமிழக கோவில்களில் திருடப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோவிலில் 600 ஆண்டுகள் பழமையான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், ஸ்ரீபலி நாயகர் உட்பட, ஐந்து பஞ்சலோக சிலைகள் கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருடப்பட்டன. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், 1084ஆம் ஆண்டில், கண்டுபிடிக்க முடியாதவை என்ற பட்டியலில் இந்த சிலை திருட்டு வழக்கையும் சேர்த்துள்ளனர். இந்த தகவல், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தெரிய வந்ததை அடுத்து, ஐஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புப்பிரிவு போலீஸார் சிலைகளை தேடும் பணியை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணையில், குலசேகரமுடையார் கோவிலில் திருடப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக சிலைகள், ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக கோவில்களில் திருடப்பட்ட வேறு பல சிலைகளும் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழகம் கொண்டு வருவோம் என சிலை தடுப்புப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.