வடமாநிலங்களில் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

269

வடமாநிலங்களில் தொடர் கனமழை காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து முடங்கியது. ரயில்வே நிலையங்கள் நீரில் மூழ்கின. லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான மழை பெய்தது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பெய்த கனமழை காரணமாக, விலையுர்ந்த குவாலியர் ரக கார் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமோ நகரத்தில் பாலம் மழை வெள்ளநீரில் மூழ்கியுள்ளதை அடுத்து, குழந்தைகளும், பொதுமக்களும் ஆபத்தான சூழ்நிலையில், நடந்தும், வாகனங்களிலும் கடந்து செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் பிகானிர் ரயில் நிலைய தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழையால் முழுவதுமாக மூழ்கியுள்ளது. அதில் இருந்து வெளியேற வழியின்றி மக்கள் காத்து கிடக்கின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்தில், விச்வாம்பாபுர் மற்றும் பட்வாகன் ஆகிய இருபகுதிகளை இணைக்கும் பாலம் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து, பாலத்தின் இருமுனைகளிலும், பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இதேபோல, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திலும் கனமழை பெய்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், மேற்கு வங்கம், ஒடிசா மாநில மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.