குட்கா விவகாரத்தில் தொடர்புடைய மாதவ்ராவை நான் சந்திக்கவே இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

142

சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ஆம் ஆண்டே குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை தடை செய்யப்பட்டதாகவும், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை தான் சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். காய்த்த மரம்தான் கல்லடி படும் என்ற வகையில் என் மீது அரசியல் எதிரிகள் குற்றச்சாட்டுகள் எழுப்புகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்று கூறியுள்ள விஜயபாஸ்கர் இதுபோன்ற பிரச்சனைகள் தன் வாழ்வில் ஏற்படும் போதெல்லாம் அதனை கடந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை எனவும், இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளியே வருவேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.