நீட் தேர்வு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்.

242

நீட் தேர்வு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஒரு நாடு-ஒரே தேர்வு என்ற வல்லாதிக்க எண்ணத்தோடு திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கனவுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் வேட்டு வைத்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழாமல், தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அரசு அடகு வைத்து விட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு அளிக்கும் அரசாணை, உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டு இருப்பதை வேதனை அளிக்க கூடியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தை பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்கா விட்டால், அந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.