பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கவேண்டும்…. திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

145

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு சரியாகும் வரை அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் குறித்த பிரதமரின் அறிவிப்பால், கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் பாதுகாப்பாக உள்ளநிலையில், ஏழை மக்கள் நிலை நாளுக்குநாள் அவலத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்தியமாநில அரசு ஊழியர்களுக்கும், பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கும் இந்த மாதம் ரொக்கமாக ஊதியம் வழங்க முடியுமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுகிற மூத்த குடிமக்கள் அவர்களது குடும்பத்தினர் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தங்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருவதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,
மத்திய அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக, ரொக்கமாக வழங்கும் ஊதியத்தை, அரசு ஊழியர்கள், வங்கி சேவைகள் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ஆணையிடுவது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்று தெரிவித்துள்ளார்.
அவசரத் தேவைகளுக்கு ரொக்கப் பணமே தேவைப்படும் நிலையில், மற்ற வழிமுறைகள் அலைச்சலையும் மன உளைச்சலையுமே தரும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
எனவே, நிதி நெருக்கடி சரிசெய்யப்படும் வரை, அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.