சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என்று முதலமைச்சர் அதீத ஆர்வத்துடன் செயல்படுவது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விளை நிலங்கள் பறிபோவதால் சென்னை – சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தை, எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின்,

திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்? எனவும் அந்த குறிப்பிட்டுள்ளார். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், சென்னை – சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.