திமுகவின் தலைவரானார் மு.க.ஸ்டாலின்..!

242

கருணாநிதி மறைவுக்குப்பின், திமுகவின் தலைவரானார் மு.க.ஸ்டாலின். இதனை பொதுக்குழுவில் முறைப்படி பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை பொதுச் செயலாளர் அன்பழகன் முறைப்படி அறிவித்தார். திமுக பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்வானார். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-இல் தலைவர் பதவியை ஏற்படுத்தி, கருணாநிதி அந்தப் பதவியை வகித்தார்.

அவர் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவின் 2-ஆவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவராக அறிவிக்கப்பட்ட பின், பொதுக் குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதியின் உருவப் படங்களுக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, மேடையில் அமர்ந்திருந்த க. அன்பழகனிடம் ஸ்டாலின் ஆசி பெற்றார். அப்போது, ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய அன்பழகன் கன்னத்தைக் கிள்ளி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.