தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்..!

271

திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, மதவாதத்திற்கு எதிராக தனது உரையின் மூலம் ஸ்டாலின் நம்பிக்கை விதைத்துள்ளார் என்றார். திராவிட இயக்கம் ஆயிரம் காலத்து பயிர், அதை யாராலும் அழிக்க முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்று குறிப்பிட்டார்.

எதிர் கட்சி தலைவராகவும், அனுபவம் மிக்க தலைவராக பணியாற்றிய இவர், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். ஸ்டாலின் தலைமையில் திமுகவிற்கு நல்ல காலம் உருவாக வேண்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், பாஜகவை வெல்ல முடியாது என்றும் கூறினார்.