கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு இரங்கல். தலா ரூ.2 லட்சம் நிதியுதவி..!

434

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கி அக்கட்சியின் பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் பொதுக்குழு இன்று கூடியது. திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் முன்னாள் அமைச்சர் முத்துராமலிங்கம் ஆகியோர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தனர். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐநா பொதுச் செயலாளர் கோபி அனன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 13 பேர் மற்றும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. 248 பேரின் குடும்பத்திற்கும் திமுக சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.