திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்..!

102

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின் அக்கட்சியின் பொதுக்குழு இன்று முதன் முறையாகக் கூடியது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கருணாநிதி மறைவுக்கு பிறகு முதன் முதலாக திமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தணிக்கை குழு அறிக்கை, திமுக தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால், போட்டியின்றி தேர்வாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.