தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டி..!

347

தி.மு.க தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் அதற்கான விண்ணப்பத்தை வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி மறைவுக்கு பின் காலியாக உள்ள தி.மு.க தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் அன்பழகன் அறிவித்தார். வரும் 28-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் திமுக தலைவராகவும், பொருளாராகவும் தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் தலைவர் பதவிக்கும் ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவை பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இந்நிலையில் ஸ்டாலினும், துரைமுருகனும் தங்களது வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலின், தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கலை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தாக்கல் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மனுவை தி.மு.கவின் 64 மாவட்ட செயலாளர்களும் பணம் செலுத்தி முன்மொழிந்தனர். ஸ்டாலினை எதிர்த்து வேறு யாரும் மனு செய்யாததால் ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்தவற்கு முன் ஸ்டாலினும், துரைமுருகனும் விண்ணப்பங்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக கோபாலபுரம் இல்லத்தில் தாயிடம் ஆசி பெற்ற ஸ்டாலின் கருணாநிதி படத்திற்கு முன் வேட்பு மனுவை வைத்து வணங்கினார். துரைமுருகனும் கருணாநிதி உருவப்படத்தின் முன் வேட்பு மனுவை வைத்து வணங்கினார். இதே போல் பொதுச்செயலாளர் அன்பழகனிடமும் ஸ்டாலினும் , துரைமுருகனும் ஆசி பெற்றனர்.