8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை..!

426

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில், கையகப்படுத்துதல் பற்றிய குறிப்பு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் மறு உத்தரவு வரும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்தநிலையில், சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலத்தை அராஜக போக்கில் கைப்பற்றிய அதிமுக அரசுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இனியாவது மாற்று வழி குறித்து சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், சேலம் 8 வழிச்சாலை மக்களுக்கு பயனுள்ள திட்டமாகும் என்றார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், தடை நீக்குவதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் மேற்கொள்வோம் என்று அவர் கூறினார்.