staliin

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண் சமையலர் அரசு பள்ளியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டது, அப்பட்டமான தீண்டாமை கொடுமை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பாப்பாள் என்ற பெண், சமையல் பணியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் சமைத்ததை தங்கள் பிள்ளைகள் சாப்பிடகூடாது என அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், பாப்பாள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், சமூகநீதியின் விளைநிலமான தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியின் சமையலர் தாழ்த்தப்பட்ட சமூதாயம் என்பதால், சாதி வெறியினரின் தூண்டுதலுடன் அவரை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்திருப்பது அப்பட்டமான தீண்டாமை கொடுமை என குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு பாப்பாளை அதே பள்ளிக்கு உடனடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே பணியிட மாற்றம் செய்யப்பட்ட பாப்பாளை மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.