உள்ளாட்சித் தேர்தல்: பழைய முகங்களுக்கே வாய்ப்பு அளிக்க தி.மு.க. முடிவு!

333

சென்னை, ஆக.3–
சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலைச் சந்தித்தன. ஆளும் கட்சியாக மீண்டும் அ.தி.மு.க.வும், 89 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வும் அமர்ந்துள்ளன.
2011, சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட தி.மு.க.வால் வர முடியாமல், தே.மு.தி.க. அந்த இடத்தைப் பிடித்திருந்ததையும், தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை என்று அனைத்துக் கட்சிகளும் கூறி வந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது எந்த அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. உருவெடுத்து உள்ளது என்பதை அறிய முடியும்.
இந்த இடத்தை வேறு எந்தக் கட்சிக்கும் தந்துவிடாமல், தற்போதைய இடத்தைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. காங்கிரசும், முஸ்லிம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளும் சட்டப்பேரவையில் தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. தி.மு.க. வெளிநடப்பு செய்யும்போது, அந்தக் கட்சியினரும் வழிமொழிந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர். எனினும், நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலையே உள்ளது.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தொடர்பாக ஒரு கூட்டத்தில் பேசுகையில், காங்கிரசால் தான் 89 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது என்று குறிப்பிட்டார். இது கருணாநிதியையும், மு.க. ஸ்டாலினையும் கோபப்படுத்தியுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் எதற்குக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு உள்ளது.
அடுத்த மக்களவைத் தேர்தலின் போது கூட்டணிக்காக தங்களது உதவியை காங்கிரஸ்தான் நாட வேண்டும் என்பதால், அப்போது கூட்டணி தொடர்பாக முடிவு செய்து கொள்ளலாம் என தி.மு.க. தலைமை கருதுவதாகத் தெரிகிறது. எனினும், இதுதொடர்பாக இறுதி முடிவை அந்தக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.
பழைய முகங்கள்
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, ஆரம்பத்தில் காங்கிரசால்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது என்று அந்தக் கட்சித் தலைமை கூறி வந்தது. அதன்பிறகு, தோல்விக்கு தங்களது கட்சியினரே காரணம் என்பதை தி.மு.க. தலைமை புரிந்து கொண்டு, கட்சிக்குத் துரோகம் செய்த மாவட்டச் செயலாளர்களை தொடர்ந்து நீக்கி வருகிறது. இந்தத் துரோகச் செயல் உள்ளாட்சித் தேர்தலிலும் நீடித்தால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாது. எனவே, தற்போது உள்ளாட்சித் பதவிகளில் தி.மு.க. சார்பில் இருக்கும் அனைவருக்கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை அ.தி.மு.க. இப்போதே தொடங்கி, ஒவ்வொரு வார்டிலும் உள்ள தங்களது கட்சியினரை (தி.மு.க.வினரை) இழுக்கும் முயற்சியிலும் அல்லது தேர்தலில் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வருவதாக தி.மு.க. தலைமைக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்து, மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை இழந்து உள்ள நிலையில், வேறு எந்தக் கட்சிக்கும் தி.மு.க.வினரைச் செல்ல விடாமல் தொடர்ந்து கட்சியில் தக்கவைக்க வேண்டிய கட்டாயமும் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.