பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி அமைக்காது – மு.க.ஸ்டாலின்

81

மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கரை ஆண்டு ஆட்சியில் , இந்திய ஒருமைப்பாட்டினை பலப்படுத்துவோ, வலுப்படுத்துவோ இயலாமல், சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை ஒப்பிடுவது வேடிக்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற உன்னத நோக்கத்திற்காகவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் குறைந்தப்பட்ச செயல்திட்டம் உருவாக்கிய வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்ததாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் மதவாத குரல்கள் எழுந்தவுடன், பாஜக கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் திமுக வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றி பாதுகாக்க தவறிய மோடி ஆட்சியில், எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். எனவே, மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி அமைக்காது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.