இஸ்லாமியர்களின் உரிமைகளை நிலைநாட்ட சட்டசபையில் தி.மு.க.வின் குரல் ஓங்கி ஒலிக்கும்! இப்தார் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி!!

208

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றும் போது, இஸ்லாமியர்களின் கோரிக்கைகள், உரிமைகளை நிலைநாட்ட சட்டமன்றத்தில் தி.மு.க.வின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று உறுதிபடக் கூறினார்.

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து ஆற்றிய உரை விவரம் வருமாறு:

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலை பற்றியும் கூட இங்கே பேசிய பல நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தோடு, அதே நேரத்தில் உறுதியோடு, எதிர்வரும் காலகட்டத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும், எப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளை எல்லாம் எடுத்து சொல்லி இருக்கின்றார்கள்.

வலிமையான எதிர்க்கட்சி

என்னை பொறுத்தவரையில், வெற்றியை பெற்று ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் பெரிய மகிழ்ச்சியில் இல்லை. அதேநேரத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியாத நாம் பெரிய சோர்வுடன் இல்லை. நாமும் இன்றைக்கு கம்பீரமாகத்தான் இருந்து கொண்டு இருக்கின்றோம். இன்னொரு கணக்கை கூட நீங்கள் போட்டு பார்க்கலாம், இன்றைக்கு தமிழக அமைச்சர்களை கழித்து விட்டு பார்த்தால், நாம் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அளவில் வலிமையான நிலையில் இருக்கின்றோம்.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாற்றினை எடுத்து கொண்டாலும், சட்டமன்ற வரலாற்றினை எடுத்து பார்த்தாலும், பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்று, 184 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று ஒரு பெரும்பான்மையான ஆட்சி அமைத்ததும் திமுகதான். அந்த சாதனை 1971-ல் நிகழ்த்தப்பட்டது. அதேபோல இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில், 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக இருப்பதும் திமுகதான். அந்த வரலாற்றையும் நாம்தான் உருவாக்கி இருக்கின்றோம்.

சகோதரத்துவம் வாழப் பாடுபட்டவர்

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் நிச்சயமாக எங்கள் குரல் உறுதியோடு ஒலிக்கும்.

நமது கடமையை ஆற்ற உறுதியெடுக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு, உங்களோடு சேர்ந்து நானும் அந்த உறுதியை எடுத்து கொண்டு, அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.